ராகுல்காந்தியுடன் திருநாவுக்கரசர் மீண்டும் சந்திப்பு

ராகுல்காந்தியை திருநாவுக்கரசர் மீண்டும் சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார். இதற்கிடையே நடிகை குஷ்புவும் ராகுல்காந்தியை தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
ராகுல்காந்தியுடன் திருநாவுக்கரசர் மீண்டும் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தினார். இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பின்பேரில் திருநாவுக்கரசர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதுடெல்லி சென்றனர்.

அவர்கள் அனைவரும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் ராகுல்காந்தியிடம், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், மாநிலத்தலைவரின் செயல்பாடு குறித்தும், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் விரிவாக பேசினர். பின்னர் ராகுல்காந்தி, திருநாவுக்கரசருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

சமீபகாலமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை நீக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வேளையில் டெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேநேரத்தில் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கூறும்போது, தமிழகத்தில் விரைவில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது சம்பந்தமாகவே ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு தான் கட்சி நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே ராகுல்காந்தியை, திருநாவுக்கரசர் நேற்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ராகுல்காந்தியிடம் அவர் முழுமையாக விளக்கி கூறியதாக தெரிகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் தான் நடத்திய செயல்வீரர்கள் கூட்டங்களை பற்றியும், அதில் பங்கேற்ற, பங்கேற்காத நிர்வாகிகள் குறித்தும் அவர் விளக்கி கூறியதாக தெரிகிறது.

இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவும், ராகுல்காந்தியை நேற்று தனியாக சந்தித்து பேசினார். தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்தியுடன் அவர் பேசியதாக தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தியிருப்பதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைமை தொடங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com