திருப்பரங்குன்றம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் கேவியட் மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
திருப்பரங்குன்றம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் கேவியட் மனு தாக்கல்
Published on

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், தீபம் ஏற்றப்படவில்லை.

தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு கூறினர்.

அந்த தீர்ப்பில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கூறி உள்ளனர்.இதன்மூலம் தனி நீதிபதியின் உத்தரவை, மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு செய்தால் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com