

சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்ற போது அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டு திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.
இதனை தமிழக பா.ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, காவி உடையணிந்து திருநீறு பூசியிருந்த திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டிருந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டிக்கு அருகிலிருந்த திருவள்ளுவர் சிலையை மர்மநபர்கள் சிலர் அவமதிப்பு செய்தனர்.
இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது - தஞ்சை, பிள்ளையார்பட்டியில் அவரது சிலையை அவமானப்படுத்துவது என, தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகி விட்டது. இதற்காக, காவல்துறையை கையில் வைத்திருக்கும் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஸ்டாலினின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தனது டுவிட்டரில், உலகளாவிய மனித குலத்திற்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைப்பதை ஸ்டாலின் கைவிட வேண்டும். திருவள்ளுவர் ஒரு துறவி. அவர் ஒன்றும் திமுக தலைவர் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.