திருவனந்தபுரம்: கஞ்சா சட்னி தயாரித்த ஐ.டி. நிறுவன மேலாளர் கைது

செடி ஓரளவு வளர்ந்து பக்குவம் அடைந்ததும் அதை பறித்து பாலில் அரைத்து குடித்து வந்துள்ளார்.
திருவனந்தபுரம்: கஞ்சா சட்னி தயாரித்த ஐ.டி. நிறுவன மேலாளர் கைது
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க ஆபரேஷன் தூபான் ? என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம் இருப்பதாக ஸ்ரீகாரியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

குடியிருப்பில் கஞ்சா தோட்டம்

அப்போது இதில் ஐ.டி. நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா தோட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த குடியிருப்பில் நேற்று முன்தினம் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அதில் அங்கு 70 செடிகள் அடங்கிய ஒரு கஞ்சா தோட்டம் அமைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடியிருப்பில் வசித்து வந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (வயது 26) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

ருசிகர தகவல்கள்

கைது செய்யப்பட்ட விஷாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளது. விஷால் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். இளம் வயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையான இவர், விலை கொடுத்து வாங்க விருப்பம் இல்லாமல் தன்னுடைய குடியிருப்பிலேயே கஞ்சாவை வளர்த்து வந்துள்ளார். தனது சொந்த தேவைக்காக மட்டுமே இவர் இதை வளர்த்து வந்துள்ளார். செடி ஓரளவு வளர்ந்து பக்குவம் அடைந்ததும் அதை பறித்து பாலில் அரைத்து குடித்து வந்துள்ளார். மேலும், சில சமயங்களில் இட்லி, தோசைக்கு கஞ்சா இலைகளை அரைத்து சட்னியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் அனைத்து கஞ்சா செடிகளையும் கைப்பற்றியதுடன், விஷாலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com