திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு அம்ரித் பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,
நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சுற்றுலா தலம் அருகே உள்ள நியு ஜல்பைகுரி நகருக்கு ஒரு அம்ரித் பாரத் ரெயில் கடந்த வாரம் போக்குவரத்தை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு மேலும் ஒரு அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் (வண்டி எண் 16121 / 16122) இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, திருவனந்தபுரம்- தாம்பரம் அம்ரித் பாரத் அறிமுக ரெயில் உள்ளிட்ட ரெயில்களின் போக்குவரத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த ரெயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர் வழியாக நெல்லை சந்திப்புக்கு மதியம் 1.20 மணிக்கு வந்து 1.25 மணிக்கு புறப்படுகிறது. தொடர்ந்து கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு இரவு 11.45 மணிக்கு வந்தடைகிறது.
இந்த ரெயிலில் 11 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 8 உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு இல்லாத பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டி, ஒரு உணவுக்கூட பெட்டி என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயிலுக்கான கிழமைகள், நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள தமிழ்நாடு தொடர்பான 3 அம்ரித் பாரத் ரெயில்கள் விபரம் பின்வருமாறு;
1. திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்
2. நாகர்கோவில் - மங்களூரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்
3. திருவனந்தபுரம் - செர்லபள்ளி (தமிழ்நாடு வழியாக இயக்கம்) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்






