கொடி நாள்; மக்களின் நிதியுதவி படை வீரர்களின் குடும்பங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் - பிரதமர் மோடி

மக்களின் நிதியுதவி படை வீரர்களின் குடும்பங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
கொடி நாள்; மக்களின் நிதியுதவி படை வீரர்களின் குடும்பங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ந் தேதியை மத்திய-மாநில அரசுகள் கொடி நாளாக அனுசரித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொடிநாள் என்பது நமது படை படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள். அவர்களின் சேவை, வீரம் மற்றும் தன்னலமற்ற தியாகம் போன்றவை குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.

நமது படைகளின் நலனுக்காக பங்களிப்பு செய்யுங்கள். இந்த உதவி துணிச்சலான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com