உத்தரபிரதேச தேர்தல், இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும்..! - அமித்ஷா

இந்தியாவின் எதிர்காலத்தை 22 கோடி வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச தேர்தல் முடிவு செய்யும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந்தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளன.

அந்தவகையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய மந்திரிகள் பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் முக்கியமாக உள்துறை மந்திரியும், பா.ஜனதா முன்னாள் தலைவருமான அமித்ஷாவும் தீவிர வாக்குசேகரிப்பில் உள்ளார். மதுராவின் பிராஜ் பகுதியில் நேற்று வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை கூறி வாக்குகளை கேட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். 22 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் இங்கு உள்ளனர். இந்த மாநிலம் வளர்ச்சியடையவில்லை என்றால், ஒட்டுமொத்த இந்தியாவும் பின்தங்கும். எனவே இந்த தேர்தல் வெறும் ஒரு எம்.எல்.ஏ.வையோ அல்லது முதல்-மந்திரியையோ தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. மாறாக உத்தரபிரதேச தேர்தல், இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல் ஆகும்.

இந்த மாநிலத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் அரசுகள் அமைந்திருக்கின்றன. ஆனால் சமாஜ்வாடி ஒரு இனத்தினருக்காகவும், பகுஜன் சமாஜ் மற்றொரு இனத்தினருக்காகவும் பணியாற்றி இருக்கின்றன. ஆனால் முதல் முறையாக உத்தரபிரதேசத்தில் ஒட்டுமொத்த அளவில் வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளன. இதன் மூலம் எந்த கட்சி அல்லது தத்துவம் மாநிலத்துக்கு தேவை என்பதை இந்த தேர்தல் சொல்லும்.

மோடி அரசு இல்லையென்றால் ராமர் கோவில் கட்டப்பட்டு இருக்குமா? காசி விஸ்வநாதர் கோவில் சீரமைக்கப்பட்டு இருக்குமா? வாக்கு வங்கியைப்பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் பா.ஜனதா அரசு செயல்பட்டு இருக்கிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என பா.ஜனதா எப்போதும் அறிவுறுத்தி வந்தது. ஒட்டுமொத்த தேசமும் அதை ஏற்றுக் கொண்டது. ஆனால் வாக்கு வங்கி அரசியல் காரணமாக வேறு யாரும் இதை கையில் எடுக்கவில்லை. நீங்கள் மோடி அரசுக்கு வாக்களித்தீர்கள், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு விட்டது. இன்று இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக காஷ்மீர் மாறியிருக்கிறது.

மத்தியில் 7 ஆண்டுகளாக மோடி அரசு பதவியில் இருக்கிறது. இந்த அரசு மீது ராகுல் காந்தியால் கூட ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது. உத்தரபிரதேசத்திலும் அகிலேஷ் யாதவ் தொடர்பான நபர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக இருக்கும் யோகி ஆதித்யநாத் அரசு மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்கள், 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் பிராஜ் பகுதியை சேர்ந்த நீங்கள் பா.ஜனதாவை ஆதரித்தீர்கள். இதைப்போல வருகிற தேர்தலிலும் பா.ஜனதாவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அமித்ஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com