

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கடந்த 20-ம் தேதி இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சிலர் அரங்கம் 5-ல் திடீரென நுழைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அவர்கள் அணிந்திருந்தனர். அந்த டி-ஷர்ட்களில் இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன. திடீரென இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் டி-ஷர்ட்களை கழற்றி, பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளில் கிருஷ்ணா ஹரி, குந்தன் யாதவ், அஜய் குமார், நரசிம்ம யாதவ், ஜிதேந்திர யாதவ் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை கழற்றி காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். “இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வை கண்ணியமற்ற அரசியலை அரங்கேற்றும் மேடையாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆடையை கழற்றி நின்றனர். நீங்கள் அப்படித்தான் என்று நாட்டு மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கும்போது ஏன் உங்களது ஆடையை கழற்ற வேண்டும்? இதை நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன்” என்று விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “இது இந்தியா, வடகொரியா இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா எதிர்ப்பை தேசத் துரோகமாகக் குற்றம் சாட்டும் திசையை நோக்கி மெதுவாக தள்ளப்பட்டு வருகிறது; கேள்வி கேட்பதே சதியாகக் கருதப்படும் நிலை உருவாகி வருகிறது” என்று கூறியுள்ளார்.