விமானங்கள் தரையில் விழுந்தால் வெடிப்பது இதனால்தான்!

ஒரு விமானத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும்.
விமானங்கள் தரையில் விழுந்தால் வெடிப்பது இதனால்தான்!
Published on

டெல்லி,

விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே விமான விபத்துகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பயணிகள் விமானம் வந்த பிறகு, அதன் எண்ணிக்கை சற்று அதிகமாகிவிட்டது. குறிப்பாக, விமானங்கள் தரையில் மோதி விபத்துக்கு உள்ளாகும் போதெல்லாம் உடனே வெடித்து சிதறி விடுகின்றன. அதனால்தான் பயணிகள் தப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்? என்பதை இனி பார்ப்போம்.

சாலைகளில் இயங்கும் இருச்சக்கர வாகனங்களுக்கு பெட்ரேல், 4 சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல்-டீசல் ஆகியவை எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போதைய நவீன காலத்தில் பேட்டரி வாகனங்கள் கூட வந்துவிட்டன. ஆனால், வானத்தில் பறந்து செல்லும் விமானங்கள் எதன் மூலம் இயங்குகின்றன? என்பது இன்னும் பலருக்கு தெரியாது. விமானங்களுக்கு ஏ.வி.எஸ்.என். டர்பைன் பியூல், அதாவது உயர்ரக மண்எண்ணெய் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதை ஜெட் ஆயில் என்றும் கூறுவார்கள். விமான வகைகளுக்கு ஏற்ப இந்த எரிபொருளின் மூலக்கூறுகளில் சற்று மாற்றம் ஏற்படும்.

சாதாரண வாகனங்களுக்கே பெட்ரோல் பயன்படுத்தும்போது, விமானங்களுக்கு ஏன் உயர்ரக மண்எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?. நமக்கு எல்லோருக்குமே தெரியும், மேலே செல்லச்செல்ல குளிரின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பது. அதனால்தான், மலைகளின் மீது இருக்கும் ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் ஆகியவை குளிர் நிறைந்ததாக உள்ளது. இங்கேயே இவ்வளவு குளிர் இருக்கும்போது, 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது அங்கே எவ்வளவு குளிர் இருக்கும். அதிக குளிர் உள்ள பகுதியில் பெட்ரோல் உறைந்துவிடும் தன்மை கொண்டது. ஆனால், உயர்ரக மண்எண்ணையோ மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை உறையாது. அதனால்தான், விமானங்களுக்கு உயர்ரக மண்எண்ணெய் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சரி.. அடுத்த கேள்வி விமானத்தில் எரிபொருள் எங்கு சேமித்து வைக்கப்படுகின்றன? என்பது பலரது மனதில் எழலாம். விமானத்தில் இருபுறம் பரந்து விரிந்துள்ள இறக்கைகளில்தான் எரிபொருள் சேமித்து வைக்கப்படுகின்றன. அதற்கு முக்கியமான காரணமும் இருக்கிறது. விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் பொருட்களின் எடையை விமானம் தாங்க வேண்டும் என்றால், அதன் இறக்கைகளும் வலுவாக இருக்க வேண்டும். இறக்கைகளுக்கு இடையே ஒரு ஆள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு காலி இடம் இருக்கிறது. எனவே, இறக்கைகளை வலுவாக்க இருபுறமும் உள்ள இறக்கைகளில் எரிபொருள் நிரப்பப்படுகிறது.

ஒரு விமானத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் எரிபொருளை நிரப்ப முடியும். ஒரு மணி நேரம் விமானம் பறப்பதற்கு 3,100 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகிறது. அப்படி என்றால் தொலைதூரம் செல்லும் விமானங்களுக்கு எவ்வளவு எரிபொருள் தேவை? என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். அதுவும் இறக்கைகளுக்குள் பல அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம், வானில் விமானம் திரும்பும்போது ஒரு பக்கம் உள்ள இறக்கை தாழ்வாகவும், மற்றொரு பக்கம் உள்ள இறக்கை உயரமாகவும் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் எரிபொருள் ஒரே இடத்தில் தேக்கம் அடைவதை தடுக்கவே பல்வேறு அறைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இவ்வளவு அதிகமான எரிபொருளுடன் வலம் வரும் விமானங்கள், விபத்துக்குள்ளாகும்போது, தரையில் உராய்ந்து தீப்பொறி ஏற்பட்டு, அது இறக்கைகள் உடைந்து வெளியேறும் எரிபொருள் மீது பட்டவுடன் வெடித்து சிதறிவிடுகின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com