அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் இந்த பிரதமரும் குடிக்கிறார்: மோடி பேச்சு


அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் இந்த பிரதமரும் குடிக்கிறார்:  மோடி பேச்சு
x
தினத்தந்தி 29 Jan 2025 3:07 PM IST (Updated: 29 Jan 2025 3:20 PM IST)
t-max-icont-min-icon

அரியானா அனுப்பும் தண்ணீரையே டெல்லியில் உள்ள பிரதமர் உள்பட அனைவரும் பருகி வருகின்றனர் என விஷம் கலப்பு பற்றிய கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளித்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, யமுனை ஆற்றில் விஷம் கலப்பு பற்றி கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டை குறிப்பிட்டு பிரதமர் பேசும்போது, டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி ஒருவர் அரியானாவின் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.

தோற்று விடுவோம் என்ற அச்சத்தில், பேரழிவை ஏற்படுத்த கூடிய சிலர் (ஆம் ஆத்மியை குறிப்பிட்டு) நிலைகுலைந்து போயிருக்கின்றனர். அதனால், அப்படி பேசுகின்றனர். டெல்லியில் உள்ள மக்களிடமிருந்து அரியானா மக்கள் வேறுபட்டவர்களா? அரியானாவில் வசிப்பவர்களின் உறவினர்கள் டெல்லியில் வசிக்கவில்லையா? தங்களுடைய சொந்த மக்கள் குடிக்கும் நீரில் அரியானா மக்கள் விஷம் கலப்பார்களா?

அரியானா அனுப்பும் தண்ணீரை டெல்லியில் உள்ள அனைவரும் பருகி வருகின்றனர். இந்த பிரதமரும் அந்த தண்ணீரையே குடிக்கிறார் என பேசியுள்ளார்.

சமீபத்தில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் அரியானாவில் இருந்து யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.

எனினும், யமுனை ஆற்றில் விஷம் கலக்கப்பட்டு மக்களை சென்றடைவதற்கு முன்பு டெல்லி நீர் வாரியத்தின் என்ஜினீயர்கள் சரியான தருணத்தில் கண்டறிந்து, தடுத்தனர். இல்லையெனில் இனப்படுகொலை எனும் அளவுக்கு அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். நீருடன் விஷம் கலப்பதற்கு முன்பே அது தடுக்கப்பட்டது என கூறினார்.

இதனை தொடர்ந்து கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான சான்றுகளை சமர்ப்பிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் அவரிடம் கேட்டு கொண்டுள்ளது. இதன்படி இன்றிரவு 8 மணிக்குள் உண்மையான மற்றும் சட்ட ரீதியிலான சான்றுகளை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டது. இதனால், இந்த விவகாரம் பற்றி ஆய்வு செய்து, முறையான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தது.

1 More update

Next Story