

புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்த்தில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தை விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. குறிப்பாக மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.
ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. எனவே இது தொடர்பாக வருகிற 4ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் தடையை மீறி குடியரசு தினத்தன்று டெல்லியில் நுழைவோம் என்றும், ஜன.6-ம் தேதி முதல் ஜன.20-ம்தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கிராந்திகரி கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் கூறுகையில், பல்வேறு மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 23-ஆம் தேதி நடத்தப்படும். மேலும் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி தலைநகரான டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.