

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார், ஜைகோவ்-டி என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதித்து உள்ளனர்.
இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதிக்காக கடந்த மாதம் 1-ந் தேதி, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் ஜைடஸ் கேடிலா நிறுவனம் விண்ணப்பித்தது. இதையடுத்து இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் தனது ஒப்புதலை நேற்று வழங்கினார். இதை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்பட அனைத்து மனிதர்களுக்கும் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ்-டி தடுப்பூசி கொரோனா மற்றும் டெல்டா வைரஸ்க்கு எதிராக 66% செயல்திறன் கொண்டது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படும் என்றும் அக்டோபர் முதல் மாதந்தோறும் 1 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.