அவசரநிலை காலத்தில் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம்; மகாராஷ்டிர அரசு முடிவு

அவசரநிலை காலத்தில் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
அவசரநிலை காலத்தில் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம்; மகாராஷ்டிர அரசு முடிவு
Published on

நாட்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது, கடந்த 1975ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசரநிலை அமலில் இருந்தபொழுது, ஜனநாயகம் முடக்கி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் நசுக்கப்பட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களில் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளே வெளிவந்தன. ஜனநாயகம் மீண்டும் திரும்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன.

இந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி சட்டசபையில் பேசிய முதல் மந்திரி பட்னாவிஸ், அவசரநிலை காலத்தில் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் என்பது நிதியை விட மரியாதை அளிக்கும் விசயம் ஆகும். பலருக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தங்கள் மீது தவறு இல்லாத பொழுதும் கைது செய்யப்பட்ட சிலர் வேலையை இழந்து ஏழைகளாக உள்ளனர் என கூறினார்.

இதற்கு முன் பேசிய மந்திரி மதன் எராவர், ஓய்வூதியத்திற்கான 3 ஆயிரத்து 267 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றில், அவசரநிலை காலத்தில் சிறையில் இருந்ததற்கான சான்றுகளை நிரூபிக்கும் வகையிலான ஆயிரத்து 179 விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டன.

இந்த திட்டத்திற்காக ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டு அவற்றில், ரூ.28 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, ஒரு மாதம் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், அதற்கு மேல் இருந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் மாதம் ஒன்றிற்கு வழங்கப்படும். சிறை கைதிகள் உயிரிழந்து விட்டால் உறவினருக்கு மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்து 500 (சிறையில் ஒரு மாதம் அல்லது அதற்கு குறைவாக இருந்தவர்கள்) மற்றும் ரூ.5 ஆயிரம் (ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தவர்கள்) வழங்கப்படும். இதனுடன் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com