இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது:சுப்ரீம் கோர்ட்

இந்திய சட்டப்படி, முதல் திருமணம் ரத்து செய்யப்படாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்றமாகவே கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on: 

ஆந்திராவைச் சேர்ந்த என்.ஸ்ரீதர் ரெட்டி என்பவர், கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்து முறைப்படி என்.கீதா பிரசாந்தி என்பவரை திருமணம் செய்தார். பின்னர் இருவரும் இங்கிலாந்துக்கு சென்றனர். அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதற்கிடையே, முதல் மனைவியை விவாகரத்து செய்ய ஆந்திராவில் உள்ள நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த அவர், பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெற்றார்.தொடர்ந்து, இங்கிலாந்து குடியுரிமை பெற்ற அவர், கேம்பிரிட்ஜ் கவுண்டி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், 2014-ம் ஆண்டு ஜனவரி 29-ந்தேதி இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. இதையடுத்து, அதே ஆண்டு மார்ச் மாதம் மற்றொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த முதல் மனைவி, 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கணவர் மீது இருதார மணம் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்ரீதர் ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தான் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும், 2-வது திருமணமும் அங்கேயே நடைபெற்றதால் இந்திய சட்டம் தனக்கு பொருந்தாது என்றும் வாதிட்டார்.

இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.அப்போது, இந்து திருமண சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படாத 'திருமண முறிவு'என்ற காரணத்தின் அடிப்படையில் இங்கிலாந்து நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த உத்தரவை இந்தியாவில் தானாகவே அங்கீகரிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும், இந்தியாவில் இந்து முறைப்படி நடைபெற்ற முதல் திருமணம் சட்டப்படி நீடிக்கும் நிலையில், வெளிநாட்டில் 2-வது திருமணம் செய்துகொண்டதை காரணம் காட்டி இந்திய சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியாது என்றும் கூறினர்.இந்திய தண்டனைச் சட்டத்தின் 494-வது பிரிவின்படி இருதார மணத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, கணவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். அதே நேரத்தில், இந்த சதித்திட்டத்தில் தொடர்பு இருந்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவரது பெற்றோர் மற்றும் 2-வது மனைவி மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

X