

அமராவதி,
ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவர், தான் வாக்காளர்களுக்கு கொடுத்த தேர்தல் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு வீடியோ வெளியிட்டு எச்சரித்திருக்கும் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேரு நகராட்சியின் 32-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாத் ரெட்டி என்பவர் போட்டியிட்டார். இந்த நிலையில் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இத்தேர்தலில், அவர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை அவர் பணம் விநியோகம் செய்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஜனசேனா கட்சி வேட்பாளர் பூலா ஷெட்டியிடம் பிரசாத் ரெட்டி குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பணம் கொடுத்தும் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதை அறிந்த பிரசாத் ரெட்டி கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தார்.
தோல்வியால் விரக்தியடைந்த பிரசாத் ரெட்டி, வாக்காளர்களை எச்சரித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-
"நான் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 சதவீத வட்டிக்கு கடன் வாங்கித்தான் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தேன். பணம் வாங்கியும் எனக்கு ஓட்டுப் போடாத 400 பேர், தங்களது பணத்தை உடனடியாக என்னிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்.
பணத்தைத் திருப்பி தராதவர்கள் நேராக மாரியம்மாள் கோயிலுக்கு வந்து அந்த பணத்தைச் செலுத்தி விடுங்கள். இல்லையெனில், நானே நேரடியாக உங்கள் வீட்டிற்கு வந்து வாசலில் அமர்ந்து விடுவேன். பணத்தைத் தராமல் ஏமாற்றினால் 'மாரியம்மா சும்மா விட மாட்டாள்' உங்களுக்கு சாபம் கொடுப்பாள். நீங்கள் திருப்பி தரும் பணத்தை வைத்து, இந்த வார்டில் நான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்."
இவ்வாறு பிரசாத் ரெட்டி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதே சட்டப்படி குற்றமாக உள்ள நிலையில், தோற்ற பிறகு "வாங்கிய பணத்தைத் திருப்பித் கொடு" என்று வேட்பாளர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டிருப்பது ஆந்திர அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.