உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மாநாடு; மேதா பட்கர் பங்கேற்பு

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மாநாடு நடந்தது. பஸ், டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்தனர். மேதா பட்கரும் பங்கேற்றார்.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மாநாடு; மேதா பட்கர் பங்கேற்பு
Published on

மகா பஞ்சாயத்து

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முகாமிட்டு கடந்த 9 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய 10 சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையே, 40 விவசாய சங்கங்கள் இணைந்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் சார்பில் கிசான் மகாபஞ்சாயத்து என்ற பெயரில் விவசாயிகள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில் இம்மாநாடு நேற்று நடைபெற்றது. உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப், கர்நாடகா உள்பட 15 மாநிலங்களில் இருந்து 300 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

நாடு விற்பனை ஆவதை தடுக்க வேண்டும்

அவர்கள் ஏராளமான பஸ்கள், கார்கள் மற்றும் டிராக்டர்களில் வந்து சேர்ந்தனர். கையில் தங்களது கொடி, தலையில் பல வண்ண தொப்பியுடன் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.மாநாட்டில் சமூக சேவகி மேதா பட்கர், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட பிரபலங்கள் மேடையில் அமர்ந்திருந்தனர்.

பாரதீய கிசான் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், மாநாட்டில் பேசியதாவது:-

நாடு விற்பனை செய்யப்படுவதை நாம் தடுக்க வேண்டும். விவசாயிகள் காக்கப்பட வேண்டும், நாடு காக்கப்பட வேண்டும், வர்த்தகம், தொழிலாளர்கள், இளைஞர்கள் காக்கப்பட வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம். இதுபோன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி வீட்டுக்கு பாதுகாப்பு

மாநாட்டுக்கு வந்தவர்களுக்காக 5 ஆயிரம் உணவு கடைகளும், நடமாடும் கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. மருத்துவ குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. மாநாட்டில், கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் விவசாய சங்க தலைவர் கன்னடத்திலேயே பேசினார்.மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவ ராஷ்டிரீய லோக்தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி அனுமதி கோரியிருந்தார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட கலெக்டர் அபிஷேக் சிங் அனுமதி மறுத்து விட்டார்.மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான், பா.ஜனதா எம்.எல்.ஏ. உமேஷ் மாலிக் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த மாநாடு, மோடி அரசுக்கும், யோகி ஆதித்யநாத் அரசுக்கும் விவசாயிகளின் பலத்தை உணர்த்தி இருப்பதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com