

புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் பா.ஜனதா அரசை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு அணி சேர்ந்து வரும் அந்த கட்சிகள், அடிக்கடி கூட்டம் போட்டு தங்கள் கூட்டணியை உறுதி செய்து வருகின்றன.
அந்தவகையில் கொல்கத்தாவில் கடந்த மாதம் 19-ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார். மாநில தலைநகர் குலுங்கும் அளவுக்கு நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. ஆம் ஆத்மி தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கனிமொழி எம்.பி. (தி.மு.க.), சந்திரபாபு நாயுடு (தெலுங்குதேசம்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), சரத் யாதவ் (லோக் ஜனதாதளம்) உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் அனைவரும் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ஜனநாயக அமைப்புகளை சீரழிப்பதாக குற்றம் சாட்டியதுடன், பா.ஜனதா அரசால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் வருகிற தேர்தலில் மோடி அரசை வீழ்த்துவதே இலக்கு எனவும் தெரிவித்தனர்.