

புதுச்சேரி,
புதுச்சேரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரும், தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு இரு வீட்டார் சம்மதத்துடன் பெண் வீட்டில் நிச்சயம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த பெண் 2 வாரம் காதலன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை எடுத்து பெண்ணின் தோழியின் செல்போனுக்கு காதலன் அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி, அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து அந்த பெண்ணிற்கு அழைப்பு வந்தது. அதில் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திலிருந்து சப்-இன்ஸ்பெகடர் பேசுகிறேன் எனக்கூறி ஆபாசமாக திட்டி மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிந்து, வாலிபர் மற்றும் செல்போன் மூலம் அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரையும் தேடி வருகின்றனர்.