

புதுடெல்லி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பழைய சோபா ஒன்றை விற்பனை செய்வதற்காக பிரபல விற்பனை தளமான ஓஎல் எக்ஸ்-ல் விளம்பரம் கொடுத்திருந்தார். இதனை பார்த்த சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் ஹர்ஷிதாவை அணுகி சோபாவை வாங்குவதற்காக ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கை வாங்கி அவரின் நம்பிக்கையை பெறுவதற்காக சிறிய அளவு பணத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் கியூ ஆர் கோடு (QR code) லிங்க் ஒன்றை அனுப்பி வைத்து அதன் மூலம் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 34,000 ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.
மோசடி நபரின் செயல் குறித்து டெல்லி சிவில் லைன் போலீஸ் நிலையத்தில் ஹர்ஷிதா புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் மதுரா எல்லையில் சஜித்(26), கபில்(18) மற்றும் மன்வீந்திர் சிங்(25) ஆகியோரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இருப்பினும், முக்கியக் குற்றவாளியான வாரிஸ் (25) என்பவரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.