தெலுங்கானா சட்டசபையில் அமளி: கவர்னர் உரை இடம்பெறாததால் பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு

தெலுங்கானா சட்டசபை கவர்னர் உரையின்றி தொடங்கியதால் பட்ஜெட் தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரான இதில் கவர்னர் உரை இடம்பெறுவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கவர்னர் உரை இன்றியே கூட்டத்தொடரை நடத்த மாநில அரசு முடிவு செய்தது.

இதற்கு பா.ஜனதா உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் முந்தைய அமர்வு ஒத்திவைக்கப்படாததால், இந்த அமர்வில் கவர்னர் உரை தேவையில்லை என அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலையில் தொடங்கியது. இதில் முதல் நிகழ்ச்சியாக 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.2.70 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை நிதி மந்திரி ஹரிஷ்ராவ் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே கவர்னர் உரை இல்லாமல் பட்ஜெட் தொடரை நடத்துவதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடாமல் அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பா.ஜனதாவின் 3 உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் ஒன்றை மந்திரி சீனிவாஸ் யாதவ் தாக்கல் செய்தார். இது நிறைவேறியதை தொடர்ந்து 3 உறுப்பினர்களும் இந்த தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதைப்போல கவர்னர் உரையின்றி சபை நடவடிக்கைகள் தொடங்கியதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த அவர்கள், பின்னர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இவ்வாறு கவர்னர் உரையின்றி சபை நடவடிக்கைகள் தொடங்கியதற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடத்திய அமளியால் தெலுங்கானா சட்டசபையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com