

சண்டிகர்,
அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்காமல், வீடியோ கால் மூலம் இறுதி நிகழ்வைப் பார்த்த 3 மகள்களின் செயல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் ஷிவ்சரண் ராம் ரத்தன் குப்தா (74 வயது). அவர் முன்னாள் ஜவுளி வியாபாரி. குப்தாவுக்கு அனிதா, நிஷா மற்றும் பிரியா என 3 மகள்கள் உள்ளன. அவர்கள் 3 பேரும் தற்போது வெளி மாநிலங்களில் வசித்து வருகின்றனர். எனவே, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் குப்தா தங்கி வந்தார்.
இந்த நிலையில் அவர் உடல்நிலை மோசமடைவதற்கு 20 நாட்களுக்கு முன்பிருந்தே முதியோர் இல்ல நிர்வாகம் அவரது மகள்களுக்குத் தகவல் தெரிவித்தது. ஆனாலும் அவரது 3 மகள்களும் அங்கு வரவில்லை. இதையடுத்து குப்தா வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆகஸ்டு முதல் வாரத்தில் உயிரிழந்தார்.
குப்தா உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதியோர் இல்ல நிர்வாகம் அவரது மூன்று மகள்களுக்கும் தகவல் தெரிவித்தது. நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வசித்து வந்த அவர்கள், நேரில் வர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் இறுதிச்சடங்கு நடைபெறும் காட்சியை வீடியோ கால் மூலம் காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
குடும்பத்தினரின் ஒப்புதலுடன் குப்தாவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. பின்னர், மகள்கள் யாரும் வராததால், முதியோர் இல்ல நிர்வாகத்தினரே அனைத்து இறுதிச்சடங்கு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு, உடலைத் தகனம் செய்தனர்.
இறுதிச்சடங்கு செலவுக்காக மூத்த மகள் அனிதா ஆன்லைன் மூலம் ரூ 5,100 அனுப்பினார். தந்தையின் அஸ்தியை கங்கை நதியில் கரைக்குமாறு, அவர்கள் முதியோர் இல்ல ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பெற்றோரின் இறுதிக்கடமைகளில் குடும்ப உறுப்பினர்கள் பங்கு பெறாதது, குறித்து பல்வேறு தரப்பினரிடையே விவாதம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.