மக்களவை சபாநாயகர் முன்பு காகிதங்களை கிழித்து வீசி ரகளை; 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்

மக்களவை சபாநாயகரின் மேஜையில் இருந்த காகிதங்களை எடுத்து, அவர் முன்பு கிழித்து வீசி ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.
மக்களவை சபாநாயகர் முன்பு காகிதங்களை கிழித்து வீசி ரகளை; 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, கடந்த 2-ந் தேதி தொடங்கியது.

அன்று முதல், டெல்லி கலவரம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு சபைகளையும் முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மக்களவைக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சபாநாயகர் ஓம்பிர்லா வரவில்லை.

இதன் காரணமாக மாற்றுத்தலைவர்களான பித்ருஹரி மக்தாப், ராஜேந்திர அகர்வால் (பா.ஜனதா), ரமாதேவி, மீனாட்சி லேகி (பா.ஜனதா) ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் மாறி, மாறி அமர்ந்து சபையை வழிநடத்தினர்.

சபை நேற்று கூடியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வழக்கம்போல டெல்லி கலவர விவகாரத்தை கையில் எடுத்து, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையில் இருந்த பித்ருஹரி மக்தாப், சபையை நடத்துவதில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவதால் சபாநாயகர் வருத்தம் அடைந்துள்ளார் என்பதை தெரிவித்து, கொரோனா வைரஸ் பற்றிய விவாதம் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அமளி நீடித்ததால் சபை 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

12 மணிக்கு சபை கூடியபோது, சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் கொரோனா வைரஸ் பற்றி அறிக்கை அளித்தார். அந்த வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வருகிற நடவடிக்கைகள் பற்றி அவர் விவரித்தார். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த ராஜேந்திர அகர்வால், இந்த பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் கருத்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்) உள்ளிட்ட எம்.பி.க்கள் கருத்து தெரிவித்தனர். சபை சுமுகமாக சென்று கொண்டிருந்தது.

ஆனால் ராஜஸ்தானை சேர்ந்த ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி எம்.பி. ஹனுமான் பெனிவால், இதில் சோனியா, ராகுல் காந்தி பெயரை தேவையின்றி இழுக்கவே காங்கிரசார் கொந்தளித்தனர். அவரது சர்ச்சைக்குரிய கருத்து சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இருந்தாலும் இந்தப் பிரச்சினை, காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் சபாநாயகர் இருக்கையின் முன்பாக கூடி அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் சபை கூடியபோதும் நிலைமையில் மாற்றம் இல்லை. ஆனாலும் சபாநாயகர் இருக்கையில் இருந்த ரமாதேவி, சபையை தொடர்ந்து நடத்தினார். இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியை தீவிரப்படுத்தினர்.

அரசு தரப்பில் கனிம திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தபோது, சபாநாயகர் மேஜை மீது இருந்த காகிதங்களை காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் கிழித்து, வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து சபை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் 3 மணிக்கு கூடியபோது மீனாட்சி லேகி சபையை நடத்தினார்.

அவர், சபாநாயகர் மேஜையில் இருந்த காகிதங்களை காங்கிரஸ் எம்.பி.க்கள் குர்ஜீத் சிங் ஆஜிலா, பேஹனான் பென்னி, கவுரவ் கோகாய், டீன் குரியகோஸ், டி.என்.பிரதாபன், மாணிக்கம் தாகூர், ராஜ்மோகன் உன்னிதான் ஆகியோர் கிழித்து வீசி எறிந்தனர், இந்த செயலுக்கு சபை கண்டனம் தெரிவிக்கிறது என கூறினார். (7 எம்.பி.க்களில் மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதி எம்.பி. ஆவார்).

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, இந்த உறுப்பினர்கள் சபாநாயகரை அவமதித்து விட்டனர் என கூறினார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரை இந்த அமர்வின் எஞ்சிய நாட்கள் முழுவதும் சபையில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கு, விதி எண்.374-ன் கீழ் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதனால் இந்த எம்.பி.க்கள், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சபைக்கு வர முடியாது.

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடை நீக்கத்தை பாரதீய ஜனதா கட்சி வரவேற்றது. இதையொட்டி கருத்து தெரிவித்த மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோர், காங்கிரஸ் எம்.பி.க்களின் செயல், முன்எப்போதும் நடந்திராததும், கட்டுக்கு அடங்காததும் ஆகும். அவர்களை இடைநீக்கம் செய்ததை நாங்கள் வரவேற்கிறோம் என கூறினார்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. இதையொட்டி மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், இது சர்வாதிகாரமான முடிவு. இது பழிவாங்கும் அரசியல். இந்த முடிவு, சபாநாயகரின் முடிவு அல்ல. இது அரசின் முடிவு என சாடினார்.

டெல்லி கலவர விவகாரத்தினால் மாநிலங்களவை, நேற்றும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com