நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசியது முட்டாள்தனம்; நடிகர் கிச்சா சுதீப் அறிக்கை

நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்டது முட்டாள்தனமான செயல் என்று நடிகர் கிச்சா சுதீப் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீசியது முட்டாள்தனம்; நடிகர் கிச்சா சுதீப் அறிக்கை
Published on

பெங்களூரு:

அமைதியான முறையில்...

அதிர்ஷ்ட தேவதை குறித்து நடிகர் தர்ஷன் சர்ச்சை கருத்துகளை கூறி இருந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தர்ஷன் நடித்து உள்ள கிராந்தி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒசப்பேட்டேயில் நடந்தது. அப்போது கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உயிரிழந்த பிரபல நடிகர் ஒருவரின் ரசிகர், தர்ஷன் மீது செருப்பை வீசினார்.

இந்த சம்பவத்திற்கு கன்னட திரைஉலகினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

'நமது நிலம், மொழி மற்றும் கலாசாரம் அனைத்தும் அன்பு மற்றும் மரியாதையை பற்றியது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உள்ளது. ஒவ்வொரு தீர்வுக்கும் பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு நபரும் கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கு தகுதியானவர். எந்த பிரச்சினையும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.

முட்டாள்தனமான செயல்

தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட வீடியோவை பார்க்க கவலையாக இருந்தது. அந்த சம்பவத்தின் போது படத்தின் நடிகை, படக்குழுவினரும் மேடையில் நின்று கொண்டு இருந்தனர். தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்டது படக்குழுவினரையும் பகிரங்கமாக அவமானப்படுத்துவது போன்றது ஆகும். இத்தகைய செயல்களுக்கு கன்னடர்களாகிய நாம் பெயர் பெற்றவர்களா?.

தர்ஷன் மீது செருப்பு வீசிய வாலிபரின் செயலை, மறைந்த நடிகர் பாராட்டி ஆதரித்து இருப்பாரா?. அந்த ரசிகரின் முட்டாள்தனமான செயல், பிற ரசிகர்களின் அன்பு, கண்ணியம், மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்த கூடாது. கன்னட சினிமாவுக்கு தர்ஷன் அளித்த பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. நமது மாநிலம் மீது மற்ற மாநிலங்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. அந்த மதிப்பை கெடுக்கும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது. நடிகர்கள், ரசிகர்கள் இடையே வேறுபாடுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு மந்திரி சுதாகரும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் கண்டனத்திற்கு உரியது. கலைக்கும், கலைஞர்களுக்கும் உயர்ந்த இடம் கொடுப்பது நமது கன்னட கலாசாரம். கன்னடர்களின் மனதை புண்படுத்தும் இதுபோன்ற செயல்கள் இனி நடக்க கூடாது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com