மத்தியபிரதேசம்: கிராமத்திற்குள் நுழைந்த புலி - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

கிராமத்திற்குள் புலி நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
போபால்,
மத்தியபிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் பந்தவ்கர் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது வனவிலங்குகள் நுழைவது வழக்கம்.
இந்நிலையில், பூங்காவுக்கு அருகே உள்ள கிராமத்திற்குள் இன்று மதியம் புலி நுழைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து புலி ஊருக்குள் வருவதை கண்ட கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அப்போது, கிராமத்தை சேர்ந்த கோபால் என்ற இளைஞரை புலி தாக்கியது. இதில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்ட மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், புலியிடமிருந்து தப்பிக்க கிராமத்தினர் சிலர் வீட்டின் மேற்கூரைகளில் ஏறி நின்று சத்தம் எழுப்பினர்.
இது குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட கொண்ட சென்றனர். கிராமத்திற்குள் புலி நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.






