

ராஜ்கோட்,
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் அமித் பிரக்ஜி, நிலேஷ் பூனாபாய். பணியில் ஈடுபட்டிருந்தபோது, இவர்கள் வீடியோ எடுத்து, அதை டிக் டாக் செயலியில் வெளியிட்டனர். அமித் பிரக்ஜி, போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேனை ஓட்டினார். அதன் முன்பகுதியில் அமர்ந்தபடி ஒரு முன்னாள் போலீஸ்காரர் போஸ் கொடுக்க, அதை பூனாபாய் சற்று தள்ளி நின்று வீடியோ எடுத்தார். பின்னர், அவர்கள் வீடியோவை டிக் டாக் செயலில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ, ஒன்றரை மாதத்துக்கு முன்பு எடுக்கப்பட்டது. இருப்பினும், டிக் டாக்கில் தீவிரமாக பரவியநிலையில், போலீஸ் கமிஷனர் மனோஜ் அகர்வால் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில், பிரக்ஜியும், பூனாபாயும் பணி நேரத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுபோல், குஜராத் மாநிலம் மெசானாவில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் நடனம் ஆடி எடுத்த வீடியோவை டிக் டாக்கில் வெளியிட்ட பெண் போலீஸ் அர்பிதா சவுத்ரி சில நாட்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.