கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா - எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கைது

கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா - எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக அரசின் கன்னட மற்றும் கலாசாரத்துறை சார்பில் திப்பு ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

முதல்-மந்திரி குமாரசாமி டாக்டர்களின் அறிவுரைப்படி ஓய்வு எடுக்கிறார். அவரது சார்பில் நான் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன். முன்னாள் மந்திரி சென்னிப்பா உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சென்றுவிட்டார். இதன் காரணமாக அவராலும் இந்த விழாவில் பங்கேற்க இயலவில்லை.

திப்பு சுல்தான் நாட்டிற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார். அவர் மீது பா.ஜனதாவினர் தேவை இல்லாத விஷயங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவரது தியாகத்தை போற்றும் வகையில் திப்பு ஜெயந்தி விழா, அரசு விழாவாக நடத்தப்படுகிறது என்று மந்திரி டி.கே.சிவக்குமார் பேசினார்.

இந்த விழாவில் கன்னடம் மற்றும் கலாசாரத்துறை மந்திரி ஜெயமாலா, உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி அனுப்பிய கடிதங்கள் வாசிக்கப்பட்டன.

திப்பு ஜெயந்தி விழாவையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விதான சவுதாவுக்கு வந்தவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் திப்பு ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக குடகு, சித்ரதுர்கா, தட்சிண கன்னட உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தினர். சிக்கமகளூருவில் தடையை மீறி வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்ற பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். அதுபோல் குடகு மாவட்டத்தில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய எம்.எல்.ஏ.க்கள் அப்பச்சுரஞ்சன், கே.ஜி.போப்பையா உள்பட நூற்றுக்கணக் கான பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி இந்த விழா அமைதியாக நடந்து முடிந்தது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com