

திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் அந்தந்த மாநில அரசு போக்குவரத்து கழக இணையதளம் மூலமாக ரூ.300 தரிசன டிக்கெட்டுக்கான கட்டணம் மற்றும் பஸ் கட்டணத்தை சேர்த்து செலுத்தி முன்பதிவு செய்யலாம். தற்போது கொரோனா பரவலால் சில மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு பஸ் போக்குவரத்து வசதி இல்லை. பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஆந்திரா வந்து, அங்குள்ள ஏதேனும் ஒரு ஊரின் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் இருந்து முன்பதிவு செய்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
முன்பதிவு செய்த பக்தர்களுக்கு திருமலைக்கு செல்ல பஸ்சில் ஏறி பயணம் செய்ய வரும்போது, அந்தந்த பக்தர்களுக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளும், பஸ் டிக்கெட்டும் சேர்த்து வழங்கப்படும் என ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.