

திருச்சி,
திருச்சி முக்கொம்பில் காவிரி ஆற்றின் வேகத்தை குறைப்பதற்காகவும், வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாத்து பயிர் சாகுபடிக்கு தண்ணீரை பிரித்து அனுப்புவதற்கும் வசதியாக கொள்ளிடம் அணை 1836-ம் ஆண்டு கட்டப்பட்டது. 630 மீட்டர் நீளம் கொண்ட இந்த அணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன.அணையின் மேல் உள்ள பாலத்தை குணசீலம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் திருச்சிக்கு வருவதற்கும், கரூர் சாலையை அடைவதற்கும் பயன்படுத்தி வந்தனர். கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் இந்த பாலம் வழியாக சென்றுவந்தனர்.இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 19-ந்தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக வந்த உபரிநீர் முழுவதும் அப்படியே காவிரியில் திறந்துவிடப்பட்டது.
இதன் காரணமாக முக்கொம்பு வழியாக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கொம்பு மேலணையில் இருந்து கடந்த 18-ந்தேதி காவிரியில் அதிகபட்சமாக வினாடிக்கு 67 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 182 ஆண்டு பழமையான கொள்ளிடம் மேலணையின் மதகுகள் பலவீனமடைந்தன.
நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் இந்த அணையில் 6 முதல் 13 வரையிலான 8 மதகுகள் திடீரென இடிந்துவிழுந்தன. இதனால் அணைக்கட்டின் மேல் பகுதி பாலமும் அப்படியே தண்ணீருக்குள் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது. நேற்று காலை 14-ம் எண் மதகும் இடிந்துவிழுந்தது. இதனால் அணையில் இடிந்த மதகுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. தகவல் அறிந்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அணையின் இரு பகுதிகளிலும் இருந்த கேட்டுகள் மூடப்பட்டன. பாலம் இடிந்ததால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் இரவு முழுவதும் முக்கொம்பிலேயே முகாமிட்டு அணையின் உடைந்த பகுதிகளை சீரமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். முக்கொம்புக்கு வந்து அணையின் உடைந்த பகுதிகளை பார்வையிட்ட அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அணையை தற்காலிகமாக சீரமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கி உள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை ஆய்வு செய்தார்.