

சென்னை,
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இதற்காக இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் அஸ்தி அடங்கிய கலசத்தினை கட்சியின் மாநில தலைவர்களிடம் வழங்கினர்.
தமிழகத்தின் சார்பில் தமிழிசை சவுந்தரராஜனிடம் பிரதமர் மோடி கலசத்தினை வழங்கினார். இந்த கலசம் அடல் கலச யாத்ரா என்ற பெயரில் நாடு முழுவதுமுள்ள மாநில தலைநகரங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படும். அதன்பின்னர் அவை ஆறுகளில் கரைக்கப்படும். தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் சென்னை என 6 இடங்களில் அஸ்தி கரைக்கப்படுகிறது.
இந்த கலசம் கொண்டு செல்லப்படும் பகுதிகளில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அஸ்தி கலசம் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார்.