கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் மேற்கு வங்காளத்தில் 15 நாள் முழு ஊரடங்கு

மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15 நாள் முழு ஊரடங்கை மம்தா அரசு அமல்படுத்தி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் மேற்கு வங்காளத்தில் 15 நாள் முழு ஊரடங்கு
Published on

கொல்கத்தா,

நாட்டில் கொரோனாவின் 2-வது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலம் உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அங்கு 20 ஆயிரத்து 839 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளானார்கள். 136 பேர் உயிரிழந்தனர்.

தற்போது அங்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 792 பேர் கொரோனாவில் இருந்து மீள சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த மாநிலத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு 15 நாள் முழு ஊரடங்கு போட மம்தா அரசு முடிவு எடுத்தது.

இதற்கான அறிவிப்பை மாநில அரசின் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 6 மணி முதல் 30-ந் தேதி மாலை 6 மணி வரையில் (15 நாட்கள்) மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என கூறி உள்ளார்.

இந்த காலகட்டத்தில் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மால்கள், மதுக்கூடங்கள், விளையாட்டு வளாகங்கள், அழகுநிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்கள், வாடகைக்கார்கள், பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், புறநகர் ரெயில்கள் அனுமதிக்கப்படாது.

பெட்ரோல் பங்க்குகள், பால், குடிநீர், மருந்து, மின்சாரம், தீயணைப்பு, சட்டம்-ஒழங்கு, ஊடகம் ஆகியவற்றின் சேவைக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மின் வணிகம், வீடுகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோக சேவை அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com