வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த சென்னை, மதுரை உள்பட 5 நகரங்களுக்கு ரெயிலில் வினியோகம்

மத்திய அரசு அமைப்புகள் மூலம் சில்லறை சந்தையில் கிலோ ரூ.35-க்கு விற்கப்படும்.
வெங்காயம்
Published on

புதுடெல்லி,

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த சென்னை, மதுரை உள்பட 5 நகரங்களுக்கு ரெயில் மூலம் கையிருப்பு வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

வெங்காயம் விலை உயர்வு

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பொதுவாக வெங்காயம் விலை உயர்வது வழக்கம். பண்டிகை கால தேவை. பருவமழை உள்ளிட்ட காரணங்களால் விலை அதிகரிக்கும். அதுபோல், தற்போது நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. அதன் அகில இந்திய சராசரி விலை, ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட 59 சதவீதம் அதிகரித்து விட்டது. சராசரி மொத்த விலை 68 சதவீதம் உயர்ந்துள்ளது. பெருநகரங்களை பொறுத்தவரை சென்னையில் நேற்று சில்லறை விலை கிலோ ரூ.60 ஆக இருந்தது. இது, ஓராண்டுக்கு முன்பு ரூ.33 ஆக இருந்தது.

கண்டா எக்ஸ்பிரஸ்

இந்நிலையில், வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தனது மொத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை மத்திய அரசு ரெயில் மூலம் சந்தைக்கு அனுப்புகிறது. இதற்காக 'கண்டா எக்ஸ்பிரஸ்' என்ற சரக்கு ரெயிலை கடந்த 2024-2025 நிதியாண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அந்த நிதியாண்டில் 12 ஆயிரம் டன் வெங்காயமும், கடந்த நிதியாண்டில் 88 ஆயிரம் டன் வெங்காயமும் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது, மராட்டிய மாநிலம் நாசிக்கில் 1 லட்சத்து 21 ஆயிரம் டன் வெங்காயம் மொத்த கையிருப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் இருந்து 'கண்டா எக்ஸ்பிரஸ்' பெட்டிகளில் வெங்காயம் ஏற்றப்பட்டு வருகிறது.

சென்னை, மதுரை

வெங்காயம் அதிகமாக பயன்படுத்தப்படும் சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம். கவுகாத்தி ஆகிய 5 பெருநகரங்களுக்கு அந்த வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது. நாளை (புதன்கிழமை) அங்கு சென்றடையும் என்று தெரிகிறது. அங்குள்ள மொத்தம் மற்றும் சில்லறை விலை சந்தைகளில் வெங்காயம் இறக்கப்படும். மத்திய அரசு அமைப்புகள் மூலம் சில்லறை சந்தையில் கிலோ ரூ.35-க்கு விற்கப்படும். சந்தையின் தேவையை பொறுத்து, மேலும் பல நகரங்களுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நித்தி காரே தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com