உற்பத்தியை பெருக்க ரூ.4,500 கோடி நிதி: இந்தியாவில் 3 மாதங்களில் 29 கோடி தடுப்பூசி கிடைக்கும்

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை பெருக்க மத்திய அரசு ரூ.4,500 கோடி நிதி வழங்குகிறது. இன்னும் 3 மாதங்களில் 29 கோடி தடுப்பூசி கிடைக்கும்.
உற்பத்தியை பெருக்க ரூ.4,500 கோடி நிதி: இந்தியாவில் 3 மாதங்களில் 29 கோடி தடுப்பூசி கிடைக்கும்
Published on

புதுடெல்லி,

இந்தியா, கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்டது. இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி வருகிறது. தினந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றின் பிடியில் சிக்கி வருகின்றனர். இந்த இரண்டாவது அலையை வெற்றி கொள்ள நாடு தொடர்ந்து போராடி வருகிறது.

அந்த வகையில், தடுப்பூசியின் 3-வது கட்ட திட்டத்தின்கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைருவருக்கும் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் தடுப்பூசி வழங்க முடிவு எடுத்து அது தொடர்பான ஏற்பாடுகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

3-வது கட்ட திட்டத்தில், தங்களது மாதாந்திர உற்பத்தியில் சரிபாதி அளவை (50 சதவீதம்) தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கும், மீதியை மாநில அரசுகளுக்கும் அல்லது சந்தைக்கும் வழங்கும்.

கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கிற புனேயின் இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலா, கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்கு ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படுவதாக இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்காக இந்திய சீரம் நிறுவனத்துக்கும், கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் ரூ.4,500 கோடியை முன் பணமாக வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இதன்படி இந்திய சீரம் நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடியையும், பாரத் பயோடெக் நிறுவனம் ரூ.1,500 கோடியையும் பெறும்.

ஒரு தடுப்பூசி டோசின் விலை ரூ.150 என்று ஏற்கனவே மத்திய அரசிடம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய சீரம் நிறுவனம் 20 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் 9 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளையும் வரும் ஜூலை மாதத்திற்குள் இந்தியாவுக்கு வழங்கும்.

இந்தியாவின் தடுப்பூசி தேவையை சந்திக்க ஏற்ற வகையில், கோவேக்சின் தடுப்பூசியை ஆண்டுக்கு 70 கோடி டோஸ் அளவுக்கு உயர்த்துவதற்கு ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலைகளில் படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசிக்கான மருந்து பொருளைத்தயாரிக்க ஐ.ஐ.எல். என்று அழைக்கப்படுகிற இந்திய இம்யூனாலஜிக்கல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com