

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில், சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் தாக்கல் செய்த ரிட் மனுவில், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் கொலின் கன்சால்வேஸ் ஆஜராகி, செங்கல்பட்டு ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு நிர்பந்திக்க முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவு எடுக்க முடியும் என தெரிவித்ததுடன், செங்கல்பட்டு ஆலை உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களை கொண்டு தடுப்பூசி தயாரிப்பை துரிதப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் புதிய மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்ததுடன், இந்த மனுவை திரும்ப பெறவும் அனுமதி வழங்கினார்.