வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க அதிகாரிகளுக்கு மந்திரி என்.எஸ்.போசராஜு உத்தரவு

கிராமத்திற்குள் வனவிலங்குகள் நடமாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டுள்ளார்
வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க அதிகாரிகளுக்கு மந்திரி என்.எஸ்.போசராஜு உத்தரவு
Published on

குடகு-

கிராமத்திற்குள் வனவிலங்குகள் நடமாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட பொறுப்பு  மந்திரி என்.எஸ்.போசராஜு உத்தரவிட்டுள்ளார்

வளர்ச்சி திட்டப்பணிகள்

குடகு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மடிகேரியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரி என்.எஸ்.போசராஜு கலந்து கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வனப்பகுதியை சுற்றி வசித்து வரும் ஆதிவாசி மக்கள் மற்றும் நகரப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

இதையடுத்து கூட்டத்தில் மந்திரி என்.எஸ்.போசராஜு பேசியதாவது:-

குடகு மாவட்டத்தில் காட்டுயானைகள், புலி, சிறுத்தைகளின் அட்டகாசம் அதிகம் இருப்பதாக மக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. இந்த வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக காட்டுயானைகள் நடமாடுவதை தடுக்க இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படவேண்டும். புலி, சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும். வனவிலங்குகள் தாக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு உதவிதொகை வழங்கவேண்டும்.

உரிமை பத்திரம் வழங்கப்படும்

இதேபோல ஆதிவாசி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும். குடகில் மொத்தம் 250-க்கும் அதிகமான ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. இங்கு மொத்தம் 58 ஆயிரம் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உரிமை பத்திரங்கள் இல்லை. அவர்களில் முதற்கட்டமாக 1,833 பேருக்கு உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 45 பேருக்கு சமூக உரிமை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் உரிமை பத்திரங்கள் வழங்கப்படும்.

இதேபோல நாகரஹொளே பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசு முன் வந்தாலும், வனத்துறையினர் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து, ஆதிவாசி மக்களுக்கு சாதகமான இடங்களில் கழிவறை, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குடகில் இனி வரும் நாட்களில் பருவமழை பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிப்புகளை அனைவரும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

ஆறுகளையொட்டி உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவேண்டும். இதற்கான பொறுப்பு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உள்ளது. அவர்கள் அலட்சியமாக செயல்பட கூடாது.  இவ்வாறு அவர் பேசினார்.

தலைக்காவிரியில் சிறப்பு பூஜை

இந்த கூட்டத்திற்கு முன்னதாக நேற்று முன்தினம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜ நடந்தது. இந்த சிறப்பு பூஜை மந்திரி போசராஜு கலந்து கொண்டு காவிரித்தாயை தரிசனம் செய்தார். அப்போது அவர் நல்ல மழை பெய்யவேண்டும் என்றும், விவசாயம் மற்றும் மக்கள் செழிப்படையவேண்டும் என்று வேண்டி கொண்டதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com