

புதுடெல்லி,
டெல்லி கரியப்பா மைதானத்தில் தேசிய மாணவர் படை (என்சிசி) அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவருடன் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைத் தளபதி விபின் ராவத், முப்படை தலைமைத் தளபதிகள் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது என்சிசி படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பிரதமர் மோடி, கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார்.
இதனைத்தொடர்ந்து நிழ்ச்சியில் பேசிய அவர், சமூக வாழ்க்கையில், ஒழுக்கத்தைக் கொண்டுவருவதில் தேசிய மாணவர் படையால் முக்கிய பங்களிப்பை அளிக்க முடியும். வெள்ளம் அல்லது வேறு ஏதேனும் பேரழிவு இருந்தாலும், என்.சி.சி வீரர்கள் கடந்த ஆண்டு இந்த நாட்டு மக்களுக்கு உதவினர்
கொரோனா காலத்தில், நாடு முழுவதும் நிர்வாகம் மற்றும் சமூகத்துடன் லட்சக்கணக்கான வீரர்கள் பணியாற்றினர். இது பாராட்டத்தக்கது. என்.சி.சியின் பங்கு மேலும் விரிவடைவதைக் காண அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த, என்.சி.சி யின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் சுமார் 175 மாவட்டங்களில் என்.சி.சிக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்காக, 1 லட்சம் என்.சி.சி வீரர்களுக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சி அளித்து வருகின்றன. இவர்களில் மூன்றில் ஒருவர் பெண்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.