

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தெடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகுகள் மீட்புப் பணியில் பயன்படுத்தப் படுகின்றன.
மலப்புரம் மாவட்டத்தில் மீனவர்கள் 5 பேர் வீதம் கொண்ட குழுக்களாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுவாகதன்மேடு, வெங்கரா உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கானோரை மீனவர்கள் மீட்டுள்ளனர். ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழு அந்த பகுதிக்கு வரும் முன்பாகவே மீனவர்கள் குழுக்களாக பிரிந்து பல பகுதிகளிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
எர்ணாகுளம் மாவட்டத்தின் அர்துன்கால் உள்ளிட்ட இடங்களில் பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மீனவர்கள் படகுகள் இல்லாமல் நீந்திச் சென்று பலரை காப்பாற்றினர்.
கேரள மீனவர்களுக்கு உதவியாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 130 மீனவர்களும் எர்ணாகுளம் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியர்வர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் படகுகளில் ஜிபிஎஸ் கருவியும் வைத்திருப்பதால் மீட்பு பணிகளை வேகமாகவும், அதேசமயம் துல்லியமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்களின் இந்த முயற்சிக்கு கேரள அரசும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மீனவர்கள் குழுக்களாக பிரிந்து செயல்படுவதற்கு தேவையான நிதி மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகிறது.
கேரளாவில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு பணத்தொகை வழங்கப்படும் என கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு மீனவரின் பணியும் மகத்தானது. நமது மாநிலத்தின் ராணுவத்தினராக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் 3 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். மேலும் அவர்களின் படகுகள் சேதமடைந்து இருந்தால் அதனை அரசே சரிசெய்து தரும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தங்களுக்கு உதவித்தொகை வேண்டாம் என மீனவர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''முதல்வர் எங்கள் பணிகளைப் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது .எங்கள் சகோதர - சகோதரிகளுக்குத்தான் உதவி செய்தோம். மக்களின் உயிரைக்காக்கும் பணிக்கு பணம் வேண்டாம், என தெரிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த செயல் கேரள முதல்வர் தொடங்கி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.