

பெங்களூரு,
பெங்களூரு சுப்பிரமணியநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் நாகேந்திரா. இவருக்கு, சமீபத்தில் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த அஞ்சனேஷ் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது தான் ஒரு ராணுவ வீரர் என்றும், குறைந்த விலையில் டி.வி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்களை வாங்கி தருவதாக நாகேந்திராவிடம் அஞ்சனேஷ் கூறி இருந்தார். இதனை நம்பிய நாகேந்திரா, அவரது உறவினர்கள், அஞ்சனேசிடம் ரூ.23 லட்சத்தை கொடுத்திருந்தார்கள்.
ஆனால் பணத்தை வாங்கிய அவர், எந்த ஒரு பொருட்களையும் வாங்கி கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்திருந்தார். இதுகுறித்து சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அஞ்சனேசை தேடிவந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அஞ்சனேஷ் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த அவர், வேலைத்தேடி பெங்களூருவுக்கு வந்துள்ளார். அவர் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை. அப்போது ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு சலுகை விலையில் அனைத்து பொருட்களும் கிடைப்பதை அஞ்சனேஷ் தெரிந்து கொண்டார். இதையடுத்து, பொதுமக்களிடம் தான் ஒரு ராணுவ வீரர் எனக்கூறி கொண்டு குறைந்த விலைக்கு பொருட்கள் வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுவரை அவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருந்தார்.
இதற்காக போலியாக துப்பாக்கி, ராணுவ வீரருக்கான அடையாள அட்டையை தயாரித்து வைத்திருந்தார். இதுதவிர 2 இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு திருமணம் செய்யாமல் அஞ்சனேஷ் ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஞ்சனேசிடம் இருந்து போலி துப்பாக்கி, அடையாள அட்டை, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.