நாளை ஐஐடி-யில் பட்டமளிப்பு விழா: உரைக்கு யோசனை கூற மாணவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

நாளை சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில், பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, தன்னுடைய உரைக்கு யோசனை தெரிவிக்குமாறு ஐஐடி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை ஐஐடி-யில் பட்டமளிப்பு விழா: உரைக்கு யோசனை கூற மாணவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த 2 நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு நரேந்திர மோடி செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் காலை 9.15 மணிக்கு தரை இறங்கும்.

பின்னர் அங்கிருந்து ஐ.ஐ.டி. சென்னை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் காலை 9.30 மணிக்கு கலந்துகொண்டு, ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், இணை மந்திரி சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே, சிங்கப்பூர் நாட்டின் கல்வித்துறை மந்திரி ஒங்க் யெ குங் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

நிகழ்ச்சி முடிந்த உடன் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

இதனைத்தொடர்ந்து 11.40 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறும் மாணவர்கள் செயல்பாட்டு அரங்கத்துக்கு நரேந்திர மோடி செல்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் அவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். பின்னர் அங்கு இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இந்நிலையில், நாளை சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில், பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, தன்னுடைய உரைக்கு யோசனை தெரிவிக்குமாறு ஐஐடி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமோ செயலியில் மாணவர்கள் தங்கள் யோசனைகளை, பகிரும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com