

புதுடெல்லி
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கடந்த மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். அப்போது ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு செங்கோட்டை கோபுரத்தில் விவசாய சங்க கொடிகளை ஏற்றினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்த டூல்கிட்டை உருவாக்கியது பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி மற்றும் மேலும் இருவர் என குற்றம்சாட்டிய போலீசார், அவரை கைது செய்து, தேசத்துரோகம் மற்றும் சதிச்செயல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
இந்தநிலையில் இன்று மீண்டும் திஷா ரவியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது திஷா ரவிக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
'டூல்கிட்' வழக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு கிரேட்டா தன்பெர்க் தற்போது கருத்து தெரிவித்து உள்ளார்.
"பேச்சு சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு மற்றும் ஜனநாயக உரிமை ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மாறான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்."StandWithDishaRavi" என்ற ஹாஷ் டேக்கை பயன்படுத்தி உள்ளார்.