சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

சிபிஐ இயக்குநருக்கு எதிரான விசாரணையை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்தது.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
Published on

புதுடெல்லி,

மத்திய புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.யில் அதன் இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டம் அடைந்தபோது, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. 2 பேரின் அதிகாரத்தையும் ஒரே நாளில் பறித்து, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

கடந்த மாதம் 23-ந் தேதி எடுக்கப்பட்ட மத்திய அரசின் இந்த முடிவால் அதிர்ச்சிக்குள்ளான அலோக் வர்மா, அந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டார். அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, அவசர வழக்காக சென்ற மாதம் 26-ந் தேதி விசாரித்தது.

அப்போது, அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானா செய்துள்ள புகார்கள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், முதல் கட்ட விசாரணையை 2 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும், இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து கே.வி.சவுத்ரி தலைமையிலான 3 உறுப்பினர்களை கொண்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், அலோக் வர்மாவிடம் விசாரணை நடத்தியது. ராகேஷ் அஸ்தானா செய்துள்ள புகார்கள் அடிப்படையில், மத்திய மந்திரிசபை செயலாளரின் ஆகஸ்டு 24-ந் தேதியிட்ட கடிதத்தின் (குறிப்பின்) படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு அலோக் வர்மா விரிவான விளக்கம் அளித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ இயக்குநருக்கு எதிரான விசாரணை அறிக்கையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், சிபிஐ புதிய இயக்குநரான நாகேஸ்வரராவ் முக்கிய முடிவு எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடர்கிறது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com