

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாட்டுக்கு பாகிஸ்தானில் இருந்து கிடைக்கும் நிதி உதவி தடுக்கப்பட்டதற்கு இடையே உளவுத்துறையின் உதவியுடன் பாதுகாப்பு படைகள் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது. பயங்கரவாத இயக்கங்களின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தி வருகிறது. உரி செக்டாரில் பள்ளதாக்கு பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க கமாண்டர் அப்துலை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. அப்துல் நாஜர் சுட்டு வீழ்த்தப்பட்டது பாதுகாப்பு படைக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.
சோபோரில் போலீசார் கொல்லப்பட்டது உள்பட 17 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட கொலைகளில் தேடப்பட்டு வந்தவன் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாரமுல்லா போலீஸ் கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசையின் பேசுகையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் லாசிபோராவில் ஊடுருவ முயன்ற அப்துல் நாஜரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என தெரிவித்தார். ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைகள் கொல்லப்பட்டதை அடுத்து அந்த இயக்கத்தின் கமாண்டராக பொறுப்பு ஏற்றுக் கொண்டு இந்தியாவிற்கு நுழைய முயன்ற போது சுட்டு தள்ளப்பட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2015-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்ப வந்து உள்ளான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செல்போன் கோபுரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதில் முக்கிய பங்காற்றிய அப்துல் நாஜருக்கு மொபைல் டவர் பயங்கரவாதி என்ற பெயரும் உள்ளது. பயங்கரவாதி அப்துல் நாஜரின் தலைக்கு ஏற்கனவே ரூ. 10 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.