

ஸ்ரீநகர்:
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட் பிராத் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று நள்ளிரவு முதல் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த என்கவுண்ட்டரில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதியான முதாசீர் பண்டிட்டை படையினர் சுட்டு கொன்றனர்.
சமீபத்தில், 3 போலீசார், 2 கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களில் 2 பேரை படுகொலை செய்ததில் பண்டிட்டுக்கு தொடர்புள்ளது. இந்த சண்டையில் மொத்தம் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கின்றனர் என காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறியுள்ளார்.
வடகாஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்ரார் என்ற அப்துல்லா என அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதி கடந்த 2018ம் ஆண்டு முதல் தீவிரமுடன் செயல்பட்டு வருகிறான் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் என்ற இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது சில பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பித்து ஓடினர்.
இதையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற ராணுவத்தினர் குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்துள்ளதாகவும், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மோதலின் முடிவில் பயங்கரவாதிகள் எத்தனை பேர் இந்தச் செயலில் ஈடுபட்டனர் என்பது தெரியவரும் என ராணுவத்தினர் தெரிவித்தனர்