

பாட்னா,
பீகார் மாநிலம் அர்ரா மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரி. கடந்த 7-ந்தேதி சஞ்சு குமாரிக்கும், வினோத் என்ற வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது. சஞ்சு குமாரியின் குடும்பத்தினர் வினோத்துக்கு வரதட்சணையாக ரூ.4 லட்சம் பணம், ஒரு பைக், பிரிட்ஜ், குக்கர், பர்னிச்சர் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளனர்.
ஆனால் இவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு, வினோத்தின் குடும்பத்தினர் தங்களுக்கு மேலும் ஒரு தங்க செயின் வேண்டும் என்று கேட்டுள்ளனர். தங்களிடம் தற்போது பணம் இல்லை என்றும், திருமணத்திற்கு பிறகு செயின் வாங்கிக் கொடுப்பதாகவும் சஞ்சு குமாரியின் குடும்பத்தினர் கூறியதை தொடர்ந்து, திருமணம் நடந்து முடிந்துள்ளது.
தங்கள் மகளுக்கு ஒரு வழியாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்டோம் என நிம்மதியாக இருந்த சஞ்சு குமாரியின் குடும்பத்தினருக்கு, 4 நாட்களில் தங்கள் மகளின் மரண செய்தி வந்து சேர்ந்தது. அவர்களது மகள் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு அதிர்ந்து போன சஞ்சு குமாரியின் குடும்பத்தினர், வினோத்தின் வீட்டிற்கு விரைந்து சென்றனர்.
ஆனால் அவர்களால் தங்கள் மகளை இறுதியாக ஒருமுறை கூட பார்க்க முடியவில்லை. வினோத்தின் குடும்பத்தினர் அதற்குள் சஞ்சு குமாரியின் உடலை அவசர அவசரமாக தகனம் செய்துவிட்டனர். மேலும், மாப்பிள்ளை வினோத் தனது குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். சஞ்சு குமாரி கடைசியாக தனது சகோதரரிடம் தொலைபேசியில் பேசியபோது, அவரது மாமியார் போனை பிடுங்கி, “உனது சகோதரி உங்கள் வீட்டிற்கு உயிருடன் வர மாட்டாள். அவளது சடலம்தான் இந்த வீட்டை விட்டு வெளியே போகும்” என்று கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.
தங்க செயின் வாங்கிக் கொடுக்காததால் மாப்பிள்ளை வீட்டார் கோபத்தில் இருப்பதாகவும், சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்றும் நினைத்து சஞ்சு குமாரியின் குடும்பத்தினர் அலட்சியமாக இருந்துள்ளனர். ஆனால் 4 நாட்களுக்குள் அவர்களின் மகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சு குமாரியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வினோத் மற்றும் அவரது குடும்பத்தினரை தீவிரமாக தேடி வருகின்றனர்.