தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் இன்று முழுஅடைப்பு

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் இன்று முழுஅடைப்பு
Published on

மண்டியா:

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மண்டியா மட்டுமின்றி மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்க்கட்சிகளான பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனாலும், விவசாயிகள், கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீ திறப்பதை கண்டித்து மண்டியா நகரில் இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று மண்டியாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மண்டியா மாவட்ட விவசாய நலச்சங்கம் உள்பட பல்வேறு விவசாய அமைப்பு மற்றும் கன்னட அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இன்று நடக்க உள்ள முழுஅடைப்பு போராட்டத்துக்கு விவசாய அமைப்பு மற்றும் கன்னட அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன் எதிர்க்கட்சிகளான பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று மண்டியாவில் திட்டமிட்டப்படி முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.

இந்த முழுஅடைப்புக்கு மண்டியா நகரில் உள்ள தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் ஆதரவு அளித்து கடைகளை மூட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மண்டியாவில் முழுஅடைப்பு போராட்டத்தின்போது சட்டத்தை கையில் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முழுஅடைப்பையொட்டி மண்டியாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மண்டியா நகர் மட்டுமின்றி ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com