

புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை 85.16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர் மந்தீப் பண்டாரி கூறுகையில், இன்று (திங்கட்கிழமை) மட்டும் மாலை 6 மணி வரை 23,61,491 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 85,16,385 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 61,54,894 பேர் சுகாதாரப் பணியாளர்கள், அதில் முதல் டோஸ் தடுப்பூசி 60,57,162 பேருக்கும், இரண்டாவது டோஸ் 97,732 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.