அஜந்தா, எல்லோராவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

சுற்றுலா நகரமான அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் வழிகாட்டிகள், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அஜந்தா, எல்லோராவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
Published on

பயணிகள் வருகை குறைவு

மராட்டியத்தின் சுற்றுலா தலைநகரம் என அழைக்கப்படும் அவுங்காபாத்தில் உலக புகழ்பெற்ற அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், பீபி கா மக்பாரா, தேவ்கிரி தவுலதாபாத் கோட்டை மற்றும் அவுரங்காபாத் குகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன.

இந்திய தொழில் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்த 5 சுற்றுலா தலங்களிலும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி முதல், நவம்பர் 21-ந் தேதி வரை 5 லட்சத்து 94 ஆயிரம் பேர் மட்டுமே இங்கு பார்வையிட வந்தனர். இதே காலகட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முந்தைய 2019-20-ம் ஆண்டில் 19 லட்சத்து 77 ஆயிரம் பேரும், 2018-19-ம் ஆண்டில் 23 லட்சம் பேரும் இங்கு வந்தனர்.

வாழ்வாதாரத்தை இழந்தனர்

முந்தைய ஆண்டுகளில் சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்த நிலையில், இந்த ஆண்டு வெறும் 745 வெளிநாட்டு பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.

பயணிகள் வருகை குறைந்ததால் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். குறிப்பாக வழிகாட்டிகள், சுற்றுலா தளத்தின் அருகே சிறு கடை வைத்திருப்பவர்கள் என பலதரப்பட்டவர்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

மனித வள பயன்பாடு

பயணிகள் எண்ணிக்கை குறைந்தது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்பு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த மனித வளத்தை பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் பணியாளர்களை நாங்கள் குறைக்கவில்லை.

மாறாக நாங்கள் சுற்றுலாதலத்தின் பராமரிப்பு மற்றும் துப்புரவு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

அதேவேளையில் சுற்றுலாத்தொழிலை நம்பியிருந்த வழிகாட்டிகளும் மற்றவர்களும் கடினமான காலங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றார்.

வழிகாட்டிகள் பரிதவிப்பு

இது குறித்து வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் அமோத் பசோல் கூறியதாவது:-

எங்கள் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 60 பதிவு செய்யப்பட்ட வழிகாட்டிகள் உள்ளனர். ஆனால் அவர்களில் பாதி பேர் தொழிலை விட்டுவிட்டு வெளியேறிவிட்டனர். இனி வணிகம் சீரடைந்தாலும், இங்குள்ள வழிகாட்டிகளின் மொத்த பலத்தை திரும்ப பெற குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு வழிகாட்டி பங்கஜ் காவ்டே கூறுகையில், கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்பு, அவுரங்காபாத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் வழிகாட்டிகளுக்கு அதிக தேவை இருந்தது.

ஆனால் இப்போது பலர் வேலை இழந்திருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. குளிர்காலத்தில் சுற்றுலா தலங்களில் கூட்டம் ஓரளவு அதிகரித்தாலும், பார்வையாளர்கள் வழிகாட்டியை பணி அமர்த்துவதில் ஆர்வம் காட்டவில்லை. பணத்தை சேமிக்க அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். பல சுற்றுலா வழிகாட்டிகள் தற்போது குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் வருமானத்தை நம்பி உள்ளனர் என்றார்.

அவுரங்காபாத் சுற்றுலா வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியதாவது:-

மலிவான கட்டணத்தில் சேவை

இந்த ஆண்டு சுற்றுலாத்துறை பல்வேறு தடைகளை எதிர்கொண்டது. அவுரங்காபாத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வரவில்லை. காரணம் அவர்களுக்கு விமான இணைப்பு வசதியும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. சாலை வழியாக வரும் சுற்றுலா பயணிகளிடம் மாவட்டத்தில் நுழைய ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்றிதழ் கேட்கப்படுகிறது.

அதேபோல சுற்றுலா பயணிகள் பல்வேறு சேவைகளை மலிவான கட்டணம் அல்லது விலையில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை அவ்வாறு விலையை குறைக்க எங்களுக்கு ஏதுவாக அமையவில்லை. எனவே குறைந்த கட்டுப்பாடுகள் உள்ள பிற மாநிலங்களுக்கு செல்வதையே சுற்றுலா பயணிகள் விரும்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com