

புதுடெல்லி,
பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு நியாயமான விலையில் போதுமான அளவு சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு சர்க்கரை கையிருப்பு தொடர்பான விதிமுறைகளை மேலும் கடுமையாக்கி உள்ளது.
அதன்படி, கொல்கத்தா மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகள், அசாம் மாநிலம் ஆகியவற்றை தவிர, நாட்டின் பிற பகுதிகளில் வருகிற 15-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை சர்க்கரை வியாபாரிகள் அதிகபட்சமாக 1,000 குவிண்டால் சர்க்கரை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு காலம் 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட மாநகரப் பகுதிகள், அசாம் மாநிலத்துக்கு மட்டும் சர்க்கரை கையிருப்பு வரம்பு 2,000 குவிண்டாலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் நிலவும் புவியியல் தடைகள் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு கூடுதல் கையிருப்பு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.