

புதுடெல்லி,
கோவையை சேர்ந்த நுகர்வோர் அமைப்பின் செயலாளரான கதிர்மதியோன் என்பவர், தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் சாலைகளை ஆக்கிரமித்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், அது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், மேலும் விபத்துகள் ஏற்படுவதால் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பரங்கள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்ததோடு, 12 வாரங்களில் அவற்றை அகற்றவும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த 13 விளம்பர நிறுவனங்கள் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், பி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விளம்பர நிறுவனங்கள் சார்பில் வக்கீல் வாதத்திற்கு பின்னர், இந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.