மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
Published on

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும் உயிரிழப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, நான் முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ளேன். மேலும் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com