பயிற்சி மையத்தில் நேர்ந்த சோகம்: தீப்பிடித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்தனர் - 20 மாணவர்கள் கருகி சாவு

பயிற்சி மையத்தில் தீப்பிடித்ததால் 4-வது மாடியில் இருந்து மாணவ-மாணவிகள் கீழே குதித்தனர். இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி பலி ஆனார்கள்.
பயிற்சி மையத்தில் நேர்ந்த சோகம்: தீப்பிடித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்தனர் - 20 மாணவர்கள் கருகி சாவு
Published on

சூரத்,

ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மாணவ-மாணவிகள் பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் தக்சஷீலா காம்ப்ளக்ஸ் என்ற 4 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் மாணவ-மாணவிகளுக்கான பயிற்சி மையம் நடத்தப்பட்டு வந்தது. இதில் 9 மற்றும் 11-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் ஏராளமான பேர் சேர்ந்து படித்து வந்தனர்.

அந்த கட்டிடத்தின் கீழ் தளங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிலையில், 4-வது மாடியில் நேற்று பிற்பகல் பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர் பாராதவிதமாக அந்த கட்டிடத்தில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது மற்றும் 4-வது மாடியில் தீப்பற்றியதால் புகைமூட்டம் சூழ்ந்தது. தீயிலும், புகையிலும் சிக்கிய மாணவ- மாணவிகள் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார்கள். சிலர் ஜன்னல் வழியாக கீழே இறங்கி தப்பிக்க முயன்றனர்.

அப்போது உயிர் பிழைப்பதற்காக சிலர் 4-வது மற்றும் 3-வது மாடிகளில் இருந்து கீழே குதித்தனர்.

இதற்கிடையே, கட்டிடத்தில் தீப்பிடித்ததை அறிந்ததும் அந்த கட்டிடத்தில் இருந்த மற்றவர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்தனர். மேலும் 19 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சேர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்து சம்பவத்தை சில தொலைக்காட்சி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

இந்த பயங்கர தீ விபத்தில் 20 மாணவ-மாணவிகள் பலி ஆனார்கள். இவர்களில் சிலர் உடல் கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் இறந்தனர். சிலர் கீழே குதித்ததால் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு நகரப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளருக்கு முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார். விபத்தில் பலியான மாணவ-மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்து உள்ளார்.

இந்த தீ விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாகவும், விபத்துக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது என்றும் துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் கூறி உள்ளார்.

இந்த விபத்தில் உயிர் இழந்த மாணவ-மாணவிகளின் குடும்பத்தினருக்கு டுவிட்டர் மூலம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுவதாகவும் கூறி உள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு குஜராத் அரசை அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இதேபோல், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இறந்த மாணவ-மாணவிகளின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com